சபரிமலை ஐயப்பனின் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சபரிமலையில் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டு, வருகிற 19-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவிற்காக இன்று காலை 10.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
மார்ச் 18-ம் தேதி காலை 11 மணிக்கு பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து தமிழ் மாதத்தின் சித்திரை மாத பூஜை மற்றும் மலையாள மாதத்தின் மீனம் மாத பூஜை, மார்ச் 15ல் மாதாந்திர தரிசனம் துவங்கும். இதில், தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஆராட்டு திருவிழாவிற்காக சபரிமலை நடை திறக்கப்பட்டதையொட்டி இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் நிலக்கல்லில் உடனடி தரிசன முன் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.