மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது . சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினந்தோறும் என்ற அடிப்படையில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆட்சியின்போது விசாரிக்கப்படாத நபர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கோடநாடு வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கவும், இன்று முதலே சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.