நில அபகரிப்பு வழக்கில் கைதானமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று காலை அவர் சென்னை புழம் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.

வழக்கு பின்னணி: சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள மீன் வலை தொழிற்சாலை நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.இந்நிலையில், ஜெயக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலமாக அந்தநிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல்விடுத்ததாகவும் கூறி மகேஷ்குமார்புகார் அளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர்ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமாரை, மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீன்: இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ‘‘மனுதாரரான ஜெயக்குமார் 2 வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள்கிழமைதோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தொண்டர்கள் வரவேற்பு: முன்னதாக நேற்றே ஜாமீன் வழங்கப்பட்டும் மாலை 6.30 மணி வரை ஜெயக்குமார் பிணை ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்காத காரணத்தால் அவர் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது என்ற விதி உள்ளது, இதனால் 4 மணி நேரமாக முன்னாள் அமைச்சரை வரவேற்க காத்திருந்த அதிமுக தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதனையடுத்து சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்து இன்று (மார்ச் 12) காலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை தொண்டர்கள் தோளில் தூக்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

3 வழக்குகளில் ஜாமீன்: ஏற்கெனவே, சென்னை மாநகராட்சி தேர்தலின்போது திமுகவைச்சேர்ந்த நரேஷ்குமார் என்பவரைதாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும், தொண்டர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் முன்னாள்அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் அவர் சிறையிலேயே இருந்தார். அவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.