நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் சிறிய வகையிலான செயற்கைக் கோள்களை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று தேசிய அறிவியல் தின தொடக்க விழாவில் விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை அறிவுறுத்தியுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் தனது புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ கோட்பாட்டை வெளியிட்ட பிப்.28-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் நாட்டின் 75-வது சுதந்திரன விழா கொண்டாடப்படுவதால், தேசிய அறிவியல் தினத்தை பிப்.22-ம் தேதி (நேற்று) முதல் 28-ம் தேதி வரை அறிவியல் திருவிழாவாக கொண்டாட மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் விக்யான் பிரச்சார் அமைப்பு, அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஒ), போர் ஊர்தி ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனம் (சிவிஆர்டிஇ) ஆகியவை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல், தொழில்நுட்ப மையத்தில் தேசிய அறிவியல் திருவிழா நேற்று தொடங்கியது.

இதில், நாட்டின் தலைசிறந்த 75 விஞ்ஞானிகளின் வாழ்க்கை குறிப்பு, டிஆர்டிஓ ராணுவ கவச வாகனங்கள், பிரம்மோஸ் ஏவுகணையின் மாதிரிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், விஞ்ஞானியுமான ஏ.சிவதாணுப் பிள்ளை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

உலகிலேயே தமிழர்களுக்குத்தான் நுண்ணறிவு மிக அதிகம். அணுவையும் துளைக்க முடியும் என்பதை அவ்வையாரும், பூமி உருண்டை என்பதை திருவள்ளுவரும் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளனர். விண்வெளி துறையில் சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் ரிக் வேதத்தில் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது நம்மிடம் உள்ள தொலைநோக்கிகளை கொண்டு, குறிப்பிட்ட அளவில் மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடிகிறது. வருங்காலத்தில் அதிக தூரம் பார்க்கும் தொலைநோக்கிகளை மாணவர்கள், இளைஞர்கள் உருவாக்க வேண்டும். இதன்மூலம் விண்வெளி துறையில் நோபல் பரிசை எளிதாகப் பெறலாம்.

விண்வெளி துறையின் வளர்ச்சி, செயற்கைக் கோள்கள் ஆகியவை தேவையில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, விவசாயம், அறிவியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் செயற்கைக் கோள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் சிறிய வகையிலான செயற்கைக் கோள்களை உருவாக்க மாணவர்கள் முயற்சி செய்யவேண்டும். விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம் 2023-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இது இந்திய விண்வெளி துறை வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் சாதனையாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சிவிஆர்டிஇ இயக்குநர் வி.பாலமுருகன், தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜப் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு பள்ளிகளின் மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர்.