சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியில் நேற்று நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அன்புமணி பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவிலேயே சென்னையில்தான் காற்று மாசும், சாலை விபத்துகளும் அதிகமாக உள்ளன. இதை சரிசெய்ய பொதுப் போக்குவரத்து முழுவதுமாக இலவசமாக்கப்பட வேண்டும்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. எனவே, கூடுதல் தரவுகளைஇணைத்து 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, ‘இந்து தமிழ் திசை’ நிருபரிடம் அன்புமணி கூறும்போது, ‘‘வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் கூடுதல் தரவுகளை சேகரிக்க வேண்டிய பணியை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் முறையாக செய்ய வேண்டும். மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் கட்சிகள் யாருமே அதிருப்திகூட தெரிவிக்கவில்லை.

இது ஒரு கட்சியின் பிரச்சினையோ, சாதியின் பிரச்சினையோ கிடையாது. கல்வி, வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் மக்களின் சமூகநீதி பிரச்சினையாகும்” என்றார்.