திருப்பதி ஏழுமலையானுக்கு ஆகம முறைப்படி பூஜைகள் நடப்பதில்லை என பக்தர் ஒருவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென தேவஸ்தானத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேகம், தோமாலை சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஏகாந்த உற்சவங்கள் ஆகம சாஸ்திரங்களின்படி நடப்பதில்லை எனவும், தவறான முறையில் மகா லகு தரிசனத்திற்கு தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருவதாகவும், உற்சவ மூர்த்திகளையும் தவறான வழியில் கையாள்வதாகவும் ஸ்ரீவாரி தாதா எனும் பக்தர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, சூர்யகாந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெலுங்கில் கூறுகையில், ‘‘நானும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களில் ஒருவனே. அவரின் மகிமையை இவ்வுலகமே அறியும். பூஜைகளில் தவறேதும் நடந்தால் அவர் மன்னிக்க மாட்டார்’’ என கூறினார். மேலும், ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கிறதா என்பது குறித்து வரும் அக்டோபர் 6-ம் தேதி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே இந்த வழக்கு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகம விதிகளில், பூஜை முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டனர். ஆனாலும், இதே பக்தர் தாதா, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.