சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சீர் என்ற தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘`மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும். அதுபோல சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரிந்த 396 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
அரசால் மீட்கப்பட்டவர்களில் சென்னையில் ஒருவர்கூட இல்லை என தெரிவிக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சென்னையில் இருக்கும் மனநலம் பாதித்தவர்களை கண்டறிந்து கரோனா தடுப்பூசி செலுத்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
மேலும் மனநலம் பாதித்தவர்களுக்கான அரசு காப்பகத்தை சீரமைக்கவும், சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.