தமிழகம் முழுவதும் நள்ளிரவில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி, 450 ரவுடிகளை கைது செய்துள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முன் விரோதம் காரணமாக ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு, கொலை சம்பவங்கள் அரங்கேறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ரவுடிகளை களையெடுக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் கொலை குற்றங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை கண்காணித்து, அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் சுமார் 50 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், 5 பேரை கைது செய்தனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பழைய குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 90 ரவுடிகளிடம் விசாரணை நடத்தி, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 36 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே ரெய்டு தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள டிஜிபி சைலேந்திர பாபு, 870 பழைய குற்றவாளிகளின் வீடுகளில் நள்ளிரவு சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் 450 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 181 பேர், நீதிமன்ற பிடியாணையின்படி கைதானவர்கள் எனவும் கூறியுள்ளார். சுமார் 420 பேரிடம் நன்னடத்தைக்கான பிணை ஆணை பெறப்பட்டதோடு, ரவுடிகளிடம் இருந்து 3 நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.