சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் சென்னை உள்ளிட்ட5 மாவட்டங்களில் முதல்முறையாகமாவட்ட நல அலுவலகங்கள் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்ட அரசாணை:

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட நல அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, உடனுக்குடன் எவ்வித தாமதமும் இல்லாமல் செயல்படுத்த மாவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன.

அதன்படி, 5 மாவட்ட அலுவலகங்களில் மாவட்ட அலுவலர், உதவி கணக்கு அலுவலர், பதிவுருஎழுத்தர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் இருந்து 20 பணியிடங்கள் பிரித்து அமைக்கப்படுகின்றன. இதற்காக ரூ.1.75 கோடி ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இந்த பணி நியமனங்கள் பேருதவியாக இருக்கும்என்பதில் சந்தேகம் இல்லை. காலம், தேவைகளை அறிந்து முதல்வர் செய்த இந்த அருமையான நடவடிக்கைக்காக சிறுபான்மை மக்கள் நன்றிக் கடன்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.