நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி அலுவலக காவலாளியின் மகளுக்கு கல்லூரியில் சேருவதற்கான உதவித்தொகை வழங்கப்பட்டது.

கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் குடியிருப்பை சேர்ந்தவர் கோபால். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காவலாளியாக பணி செய்து வருகிறார். இவரது மகள் பவதாரணி, மாநகராட்சி பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார்.

மருத்துவம் படிக்க விரும்பிய இவர், கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு, 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் 263 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வில் ஆயுர்வேத மருத்துவம் படிக்க முடிவு செய்த பவதாரிணிக்கு, ஈரோட்டில் உள்ள தனியார்கல்லூரியில் இடம் கிடைத்தது. இருப்பினும் கல்லூரியில் சேர்க்கை, விடுதிக் கட்டணம் என ரூ.1.35 லட்சம் தேவைப்பட்டுள்ளது.

போதிய வருமானம் இல்லாத நிலையில் கட்டணம் செலுத்த இயலாமல் மாணவி தவித்து வந்தார்.அவரது நிலை குறித்து அறிந்த மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரிகள், ஆணையர் ராஜகோபால் சுன்கராவின் கவனத்துக்கு கொண்டு சென் றுள்ளனர்.

இதையடுத்து, கோவையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் சார்பில், பவதாரணிக்கு ரூ.1.35 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

மசக்காளிபாளையம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உதவித்தொகையை வழங்கினார்.

இதுகுறித்து மாணவி பவதாரணி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, “மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரி பூங்கொடியிடம் முதலில் உதவி கோரினோம். அவர் எனது தேவையை மாநக ராட்சி உயரதிகாரிகள், தன்னார்வ அமைப்புகளுக்கு கொண்டு சென்று உதவி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அனைவருக்கும் நன்றி” என்றார்.