கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு மாவட்டங்களில் தை முதல் நாள் (ஜனவரி 14) அன்று வட்டார பொங்கல் விடுமுறை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளத் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மா.பேச்சிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் தொடர்புகொண்டு, 12 ஆண்டுகள் கேரள அரசு வழங்கி வருவது போன்று, இந்த ஆண்டும் அதிக தமிழர் வாழும் ஆறு கேரள மாவட்டங்களுக்கு வரும் தை முதல் நாள், ஜனவரி 14 -ஆம் தேதியன்று வட்டார பொங்கல் விடுமுறை பெற்றுத் தர வேண்டும்.
கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தனைத் தொடர்பு கொண்டு தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு கேரள மாவட்டங்களுக்கு,தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு வட்டார விடுமுறை அளிப்பதைப் போல, தை மாதம் முதல் தேதியன்று பொங்கல் விடுமுறை ஆணையைப் பெற்றுக் கொடுத்தார். அன்று முதல் கேரள அரசின் விடுமுறைப் பட்டியலில் பொங்கல் விடுமுறை தை முதல் நாள் இடம் பெற்றது .
இந்த ஆண்டு கேரள அரசு “தை மாதம் முதல் நாளுக்கு (ஜனவரி 14) பதிலாக பொங்கல் விடுமுறை அளிக்காமல், தை மாதம் இரண்டாம் நாளான, ஜனவரி 15 மலையாள மாதமான மகரம் முதல் நாளுக்கு,வட்டார விடுமுறை அறிவித்துள்ளது.தை முதல் நாளுக்கு விடுமுறை அளிக்காத இந்த அறிவிப்பு கேரளத் தமிழர்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
எனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பிரச்சினையில் உடனே தலையிட்டு , தை மாதம் முதல் நாள் (ஜனவரி14) வெள்ளிக்கிழமையன்று, கடந்த 12 ஆண்டுகள் வழங்கியதைப் போல, ஒரு நாள் பொங்கல் விடுமுறை கேரளத் தமிழர்களுக்குப் பெற்றுத் தருவதற்கு கேரள முதல்வரை உடனே தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.