கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில், 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
உலகின் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவிவரும் நிலையில், கிருஷ்ணகிரியில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தாத 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, ரேஷன் கடை, ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில், 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி போடாமல் உள்ளதாக கூறினார்.
எனவே, தடுப்பூசி போடாதவர்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தடுக்கும் நோக்கில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதன்படி, தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்குகளில் தடை விதிக்கப்படுவதாக கூறினார்.
இதேபோன்று, திருமண மண்டபங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், துணிக் கடைகள், தங்கும் விடுதிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகளுக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் கடை வீதிகள், விளையாட்டு மைதானங்கள், டீ கடைகள், ஓட்டல்கள் உட்பட 16 இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். இது உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது, பொது சுகாதார சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.