சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்றும் அதில் சிவில் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், சூப்பர்வைசர், ஓட்டுநர், மேலாளர், போன்ற பணியிடங்கள் உள்ளதாகவும் தமிழ்நாடு முழுவதும் பதாகைகள் மூலமும் சுவரொட்டிகள் மூலமும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல செய்தித்தாள் மற்றும் இணையதளங்களிலும் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தை பார்த்த இளைஞர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வடவள்ளியில் உள்ள எல்.எஸ் கன்ஸ்டிரக்சன் என்ற பெயரிலும் அஃப்போட் டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற பெயரிலும் செயல்படும் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர்.

இப்படி தொடர்பு கொண்டவர்களை அந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடம் இருந்தும் பதிவு செய்யும் வேலைக்கேற்ப ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அதன்பின்னர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தற்போது தலைமறைவாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் விமான பயண சீட்டுகளையும் வழங்கிவிட்டு, கடந்த 8ஆம் தேதி சென்னை சென்று கொரோனா பரிசோதனைகள் எல்லாம் செய்துவிட்ட பின் சிங்கப்பூர் அழைத்து செல்வோம் என தெரிவித்தனர். ஆனால்  அவர்கள் தகவல் தொடர்புகளை துண்டித்துவிட்டனர். அதனால் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது என பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சிலர் நேரடியாக அங்கு சென்று பார்த்த போது அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்தட்தை பார்த்து,  தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து  புகார் அளித்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “ அந்நிறுவனம் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளது” என்றனர். மேலும் இதுகுறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.