பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட்லியோ, தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுகிறது எனகுற்றச்சாட்டு எழுந்ததால், இந்தவழக்கில் லஞ்ச ஒழிப்பு மற்றும்கண்காணிப்புத் துறை இயக்குநர் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த மனுவில், அரசு ஊழியர்கள் மீது ஆண்டுக்கு 15 ஆயிரம் புகார்கள் வருவதாகவும், அவற்றை துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு முடிவு கட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு படைஅமைக்க வேண்டும். கல்வித் துறை மற்றும் பிற அரசு துறைகளில் நிலவும் ஊழல் நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட சிறப்பு படைஅமைப்பது உள்ளிட்ட வசதிகளைப் பெற தேவையான திட்ட முன்வரைவுகளை அரசுக்கும், டிஜிபிக்கும் அனுப்ப வேண்டும்
கல்வித் துறையில் பணிபுரியும் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ஆசிரியர் சங்கநிர்வாகிகளின் சொத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இது கல்வித் துறையில் ஊழலை பெருமளவு குறைக்க உதவியாக இருக்கும். ஊழல் புகார்கள்வந்தால், அது தொடர்பான தகவல்களை திரட்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரர் நிர்வாகரீதியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது இடமாறுதலில் தலையிட முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.