தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கென சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சிவங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் கழக விழாவில் பங்கேற்க தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உலக அளவில் சில நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசியை செலுத்தஆரம்பித்துள்ளன. இந்தியாவில் இன்று (நேற்று) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை புரிந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டதால்தான் தொற்றை கட்டுப்படுத்த முடிந்தது.

வரும் 27-ம் தேதி முதல் புதுச்சேரிக்கு விமான சேவை தொடங்க உள்ளது. அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து எல்லோரும் அரசுப் பள்ளிகளை நோக்கி வர வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் பெண்களுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இதே போன்று புதுச்சேரியிலும் நல்லபல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண்கள், குழந்தைகளுக்கென சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுஉள்ளன. ஒரு அரசு மாதிரி, இன்னொரு அரசு இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.