ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் 50-ம்ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வெற்றிச் சுடர் கொண்டு செல்லப்படுகிறது.

கன்னியாகுமரி வழியாக தமிழகத்துக்கு வந்த இந்தச் சுடர்,கடந்த 20-ம் தேதி சென்னை வந்தடைந்தது. அப்போது, இந்த வெற்றிச் சுடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக் கொண்டார். இதன் நிறைவு விழா சென்னையில் நேற்று நடை பெற்றது.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வெற்றிச் சுடரை பெற்றுக் கொண்டார். விழாவில் முதல்வர் பேசியதாவது:

இந்திய ராணுவத்துக்கு தமிழர்கள் தங்களது பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.ராணுவ வீரர்கள் தாய் நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்யத் தயங்குவதில்லை. ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருந்துவருகிறது.

6 கோடி நிதி வழங்கியது தமிழகம்

1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரில், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, பாதுகாப்பு நிதியாகரூ.6 கோடி வசூல் செய்து, அன்றைய பிரதமர் இந்திராகாந்தியிடம் வழங்கினார். நாடு முழுவதும் வசூல் செய்யப்பட்ட ரூ.25 கோடி நிதியில், தமிழகம் வசூலித்த தொகை நான்கில் ஒரு பங்காகும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், போரில் உயிர்த் தியாகம் செய்த 3 வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் போர் வீரர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவில், தென்மண்டல ராணுவ தளபதி ஏ.அருண், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலர் டி.ஜெகந்நாதன், அரசு அலுவலர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.