புதுப்பிக்கதக்க எரிசக்தியில் இலக்குகளை நிர்ணயித்து, உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்வதாக டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சனை டெல்லியில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது இரு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடந்தினர்.
பின்னர் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
உலகம் முழுவதும் கோவிட் பாதிப்பு உலுக்கிய காலத்திலும் இந்தியா- டென்மார்க் இடையே ஒத்துழைப்பு தொடர்ந்து நிலவியது. காணொலி வாயிலாக நாங்கள் சந்தித்த போது, இரு தரப்பு உறவுகளை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். இதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சர்வதேச சோலார் கூட்டமைப்பில் டென்மார்க் உறுப்பினர் ஆனது மகிழ்ச்சியாக உள்ளது. இது அந்நாட்டுடனான இந்தியாவின் உறவுகளுக்கு புது பரிமாணத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் கூறுகையில் ‘‘ 10 லட்சம் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் பல முக்கியமான இலக்குகளை நிர்ணயித்து, உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாக உள்ளது.
இந்தியாவும், டென்மார்க்கும் ஜனநாயக நாடுகள், விதிகளின் அடிப்படையில் சர்வதேச அமைப்புகளை நம்புபவை.
பசுமை வளர்ச்சி ஒரு கையில் இருந்து மற்றொரு கைகளுக்கு செல்வதில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. டென்மார்க் வர வேண்டும் என்ற எனது அழைப்பை ஏற்று கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது’’ எனக் கூறினார்.