இந்திய சுற்றுலாப் பயணிகள் ஈரானில் அதிகபட்சம் 15 நாட்கள் விசா இன்றி தங்கலாம் என இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் ஈரானுக்கு விசா இன்றி வரலாம். அவர்களிடம் பாஸ்போர்ட் இருந்தால் போதும். 6 மாதங்களுக்கு அதிகபட்சம் 15 நாட்கள் வரை அவர்கள் ஈரானில் தங்கலாம். அதற்கு மேல் நாட்கள் நீட்டிக்கப்பட மாட்டாது. சுற்றுலா நோக்கத்திற்காக வருபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அதிக நாட்கள் தங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், 6 மாதங்களில் பல முறை வர நினைப்பவர்கள் ஆகியோருக்கு வேறு வகையான விசாக்கள் உள்ளன. அவர்கள் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை தொடர்பு கொண்டு அதற்கான விசாவினைப் பெற்றே ஈரான் வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் பல்வேறு நாடுகள் இந்திய சுற்றுலா பயணிகள் விசா இன்றி தங்கள் நாடுகளுக்கு வருகை தரலாம் என அறிவித்துள்ளன. வியட்நாம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகள் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இத்தகைய சலுகைகளை வழங்கி உள்ள நிலையில், இந்த பட்டியலில் தற்போது ஈரான் இணைந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு விசா இன்றி வரலாம் என்றும் அதிகபட்சம் 30 நாட்கள் விசா இன்றி அவர்கள் தங்கலாம் என்றும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்தார். கடந்த ஆண்டு தாய்லாந்து வெளியிட்ட அறிவிப்பில், நவம்பர் 10ம் தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்தியர்கள் விசா இன்றி தங்கள் நாட்டுக்கு வரலாம் என்றும் அதிகபட்சம் 30 நாட்கள் தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் மே 10, 2024 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தாய்லாந்து அறிவித்தது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் தங்கள் நாட்டுக்கு விசா இன்றி வருகை தரலாம் என இலங்கை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.