பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ள அந்நாட்டு தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார்.

பிரான்சின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில், இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இம்மானுவேல் மேக்ரன், “ஜூலை 14 அன்று பாரிஸ் நகரில் நடைபெற உள்ள விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ள நரேந்திர மோடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என இந்தி மற்றும் பிரஞ்ச் மொழிகளில் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவின் 25-ம் ஆண்டை முன்னிட்டு, இந்த விழா அணிவகுப்பில் இந்திய பாதுகாப்புப் படையும் பங்கேற்க உள்ளது. இதனை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் தேசிய தினத்தில் அந்நாட்டு படையினர் மேற்கொள்ளும் அணிவகுப்பில் இந்திய படையினரும் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தின்போது, காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்க இழப்பு, நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் ஆகியவை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள் என்றும் ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள தற்போதைய சூழலில், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளுக்கும் உள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்த இது மேலும் ஒரு வாய்ப்பு என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.