தமிழகத்தில் திரையரங்குகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பராமரிப்பு பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன.
தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், இன்று முதல் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் முன்னேற்பாட்டு பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன. திரையரங்குகள் கடந்த 4 மாதங்களாக திறக்கப்படாமல் இருப்பதால், ஒவ்வொரு இருக்கையையும் தனித்தனியாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.
திரையரங்கு வளாகங்களில் உள்ள உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களிலும் தூய்மை பணிகள் நடைபெற்றன. கட்டிட வளாகங்களில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து, பிறகு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் 50 சதவீதம் பார்வையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகளில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வஉசி உயிரியல் பூங்கா
உயிரியல் பூங்காக்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, கோவை நேரு விளையாட்டரங்கம் அருகே உள்ள வஉசி உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது.
இதையடுத்து, பூங்கா வளாகத்தில் நேற்று பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. பூங்கா வளாகம், விலங்கினங்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பார்வையாளர் மாடங்கள் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீர் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி உயிரியல் பூங்கா நிர்வாகிகள் கூறும்போது, “காலை 9 மணிக்கு உயிரியில் பூங்கா திறக்கப்படவுள்ளது. பூங்காவில் உள்ள பணியாளர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும், பெரியவர்களுக்கு ரூ.3, சிறியவர்களுக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கப்படும்” என்றனர்.