தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவ.30 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில்,டெங்கு பரவ வாய்ப்புள்ளதாலும்,பொதுமக்களின் நலன் கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இரண்டு வார காலத்திற்கு எவ்வித தளர்வுகளும் இன்றி தீவிர கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதன் விளைவாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. எனவே ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி உள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி முறையில் பாடங்களை நடத்த தொடங்கி உள்ளன. கோவில்கள் திறப்பு, தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி, சுற்றுலா தலங்கள் திறப்பு, ஹோட்டல்களில் அமர்ந்து உண்ண அனுமதி, முழு வீச்சில் பொது போக்குவரத்திற்கு அனுமதி என அனைத்து தளர்வுகளும் அமலில் உள்ளன.

இதனால் தமிழகம் இயல்பு நிலையை நோக்கி திரும்பி உள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சம் நிலவுவதால் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.