“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு திமுக எதிர்வினையாற்றியுள்ளது.

இது தொடர்பாக பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறும்போது, “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்பமான காரணங்களைக் கூறி தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார். தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை. மக்களிடம் இருந்து சம்பாதித்துள்ள அதிருப்தியை நிர்மலா சீதாராமன் உணர்ந்திருக்கலாம்.

 

 

மக்களின் பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்த விதம் நிச்சயமாக அவருக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதனை நிர்மலா சீதாராமனும் உணர்ந்திருக்கலாம் என்பதால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக அளவில் பணம் பறித்துள்ளது. பாஜகவிடம் ரூ.6,000 கோடி உள்ளது. பாஜக அமைச்சரவையில் நிர்மலா முதன்மை அமைச்சர். அப்படியெனில் பாஜகவால் ஏன் அவருக்கு ஸ்பான்சர் செய்ய முடியாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு எங்களது கட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நானும் அது குறித்து 10 நாட்கள் வரை யோசித்துப் பார்த்தேன். பின்னர் போட்டியிட விரும்பவில்லை என எனது முடிவை தெரிவித்தேன். தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து போட்டியிட எனக்கு பரிந்துரை வந்தது. பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இதனை முன்மொழிந்தார். இருந்தும் நான் போட்டியிடவில்லை என சொன்னேன்.

மேலும், என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு போதுமான பணம் இல்லை. அதோடு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும். அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது” எனப் பேசியிருந்தார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிர்மலா சீதாராமன் பதவிக்காலம் வரும் 2028-ம் ஆண்டு நிறைவடைகிறது.