சென்னை: “சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் நீதி, மனுநீதி, மனுதர்மம். எனவே தீட்சிதர்கள் ஆய்வுக்கு வரும் குழுவினருக்கு சட்டத்தின்படி அவர்கள் கேட்கிற விளக்கங்களை அளிப்பதுதான் சட்டத்தின்படி உகந்ததாக இருக்கும்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலைப் பொறுத்தவரை அது பொதுக் கோயில் என்றுதான் ஏற்கெனவே உயர் நீதிமன்ற தீர்ப்புகள் வரப்பெற்றுள்ளன. அப்படி பொதுக் கோயிலாக இருக்கின்ற ஒரு திருக்கோயிலில் இருந்து புகார்கள் எழும்பட்சத்தில், இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 23 மற்றும் 28-ன் படி, சம்பந்தப்பட்ட பொதுக் கோயிலுக்குச் சென்று புகாரின் மீது விசாரணை நடத்தலாம்.

எனவே, கோயில் தொடர்பாக வந்திருந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு வருகிறோம் என்று, கடந்த 30-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கடிதம் அனுப்பியிருந்தார். தீட்சிதர்கள் மற்றும் கோயிலை நிர்வகிப்பவர்கள் அதற்கான ஆட்சேபனையைத் தெரிவித்து 1-ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தனர். இதற்கான உரிய பதில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த 3-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

இது சட்டத்தின் ஆட்சி என்பதால், உரிய சட்டத்தின்படி கோயில் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில்தான் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றுள்ளனர். மடியிலே கனமில்லை என்றால், வழியிலே பயமில்லை என்பதற்கு என்பார்கள். எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றால், ஆய்வு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் நீதி, மனுநீதி, மனு தர்மம் என்ற அடிப்படையில் தீட்சிதர்களுக்கு வைக்கின்ற அன்பான கோரிக்கை, ஆய்வுக்கு வரும் குழுவினருக்கு சட்டத்தின்படி அவர்கள் கேட்கிற விளக்கங்களை அளிப்பதுதான் சட்டத்தின்படி உகந்ததாக இருக்கும்.

சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை எடுக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. இதனை தீட்சிதர்களுக்கு எதிரான செயல் என்றும் நினைக்கக் கூடாது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடமிருந்து வரும் புகார்களை விசாரிக்கின்ற குழுதான் இது. உண்மை என்னவோ அதை அவர்களிடம் தெரிவியுங்கள். சட்டத்தை மீறி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என உறுதியளித்த பிறகும், தீட்சிதர்கள் ஆய்விற்கு மறுப்பதாக செய்திகள் வருகின்றன. புகார்களின் அடிப்படையில், சட்டப்படி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வு மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விவகாரம் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தமிழக முதல்வரின் கவனத்துக் கொண்டு சென்று, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தனர்.