நிதி நெருக்கடி காரணமாக தரையிறக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு சேவையை ஸ்திரப்படுத்திய பிறகு வெளிநாட்டு சேவை தொடங்கப்படும். இது அனேகமாக அடுத்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் இருக்கலாம் என்று தெரிகிறது.இத்தகவலை ஜலான் கல்ராக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முதலில் உள்நாட்டு விமான சேவை டெல்லி-மும்பை இடையே இயக்கப்படும். அத்துடன் நிறுவனத்தின் தலைமையகம் மும்பைக்கு பதில் இனி டெல்லியிலிருந்து செயல்படும்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஜலான் கல்ராக் குழுமம் அளித்த சீரமைப்பு திட்டத்துக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனம் மீண்டும் செயல்படுவ தற்கான வாய்ப்புகள் தற்போது பிரகாசமடைந்துள்ளன.
இது தொடர்பாக ஜலான் கல்ராக் குழுமத்தின் தலைமை உறுப்பினரான முராரி லால் ஜலான் வெளியிட்ட அறிக்கையில், ஜெட் ஏர்வேஸ் 2.0 மீண்டும் தனது சேவையை அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். அதேபோல வெளிநாட்டு சேவை மூன்றாவது அல்லது நான்காம் காலாண்டில் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கடன் சுமை காரணமாக 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.