“கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான உயிரிழந்த பள்ளியில் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், விடுதியை நடத்துவதற்கான அனுமதி இதுவரை பள்ளி நிர்வாகம் வாங்கவில்லை. அனுமதி வாங்காமல் விடுதியை நடத்தி வந்தது மிகப்பெரிய தவறு” என்று மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மர்ம மரணமடைந்த மாணவி இறப்பு குறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் மற்றும் மாணவியின் உடலை முதலில் பார்த்த மருத்துவர்கள் உள்ளிட்டவரிடம் தனி அறையில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைக்குப் பின்னர், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நாங்கள் மேற்கொண்ட விசாரணையில், ஒருசில உண்மைகள் தெரியவந்துள்ளன. இந்தப் பள்ளியில் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், விடுதியை நடத்துவதற்கான அனுமதி இதுவரை பள்ளி நிர்வாகம் வாங்கவில்லை. அனுமதி வாங்காமல் விடுதியை நடத்தி வந்தது மிகப்பெரிய தவறு.

கடந்த 3 மாதத்திற்கு முன்புகூட மாவட்ட ஆட்சியர், விடுதி நடத்துபவர்கள், விடுதிக்கான அனுமதி வாங்க வேண்டும் என்று செய்திதாள்களில் விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை தற்போது நாங்கள் பார்வையிட்டோம்.

மாவட்ட நிர்வாகம் இதுபோன்று விளம்பரம் செய்தபின்னரும்கூட இந்த பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளை நாங்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, பள்ளி நிர்வாகம் விடுதி நடத்துவதற்கான அனுமதி தொடர்பாக எந்த விண்ணப்பமும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளையும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துடன் மீண்டும் வந்து விசாரணை நடத்தி அறிக்கைகள் அனைத்து தமிழக அரசிடம் சமர்ப்பிப்போம்” என்று அவர் கூறினார்.