ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்ற ஒரு அடையாளத்தை தாங்கி பிடித்து கொண்டிருப்பது சென்னை கோயம்பேடு மார்க்கெட், ஆரம்பத்தில் பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடி மார்க்கெட் மிகப்பெரிய சந்தையாக திகழந்து கொண்டிருந்தது. இங்கிருந்துதான் சென்னை மக்களுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும், காய்கறி, பழங்கள் விற்பனைக்கு சப்ளையாகி வந்தன.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடி, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல காரணங்களால் 1975-ம் ஆண்டு, கொத்தவால் சாவடி மார்க்கெட் கோயம்பேடுக்கு இடமாற்றம் செய்து விரிவாக்கம் செய்ய எம்எம்டிஏ (தற்போதைய சிஎம்டிஏ) முடிவு செய்தது. இதையடுத்து, 1988-ம் ஆண்டு கோயம்பேடு மார்க்கெட் சுமார் 225 ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணி தொடங்கியது.

பின்னர், 1996-ம் ஆண்டு கோயம்பேடு மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. காய்கறிகள், பூக்கள், பழங்கள், உணவு தானியங்கள் விற்பனைக்கு என தனித்தனி பகுதிகள் பிரிக்கப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 1,600 காய்கறி கடைகளும் 1,100 பழக்கடைகளும் 500 பூ கடைகளும் 500 உணவு தானியக் கடைகளும் உள்ளன.

கோயம்பேடு சந்தைக்கு நாட்டின் பல மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. என்னதான் சுகாதார சீர்கேடு, நெரிசல் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு சந்தை விரிவாக்கம் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டாலும், அந்த நோக்கம் நிறைவேறியதா என்றால் அது கேள்விக்குறிதான். கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் காய்கறி, பழ கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்பட்டு குப்பை குவியலாகக் காட்சி தருகிறது.

கழிப்பறை வசதிகள் இருந்தும் அதனை முறையாக பராமரிக்காததால், மார்க்கெட்டுக்குள் பொதுவெளியில் பலர் இயற்கை உபாதையை கழிக்கும் அவலம் ஏற்படுகிறது. இது, சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுப்பதாக மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மார்க்கெட்டுக்குள் பெண்களுக்கான பல கழிப்பறைகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன.

கழிப்பறைகளை சில வியாபாரிகள் தங்களது சொந்த தேவைகளுக்காக ஆக்கிரமித்திருப்பதால் அவசர நேரத்தில் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அவதிப்படுகின்றனர். அதேபோல், குடிநீர் வசதி மற்றும் பார்க்கிங் வசதி முறையாக இல்லாததும், பழுதடைந்த சாலைகள், பராமரிப்பு இல்லாத கட்டிடங்கள், சீராக கிடைக்காத மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்த கோயம்பேடு மார்க்கெட் சந்தித்து வருவதாக வியாபாரிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் மார்க்கெட்டுக்கு சம்பந்தம் இல்லாத சிலர் உள்ளே வந்து மது அருந்துவதால், சில குற்றச்சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பெரிய கனரக சரக்கு வாகனங்களுக்கு மட்டும் 7.5 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு இருப்பதால், சிறிய ரக சரக்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால், அவ்வப்போது கோயம்பேடு மார்க்கெட் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதுபோன்ற பல பிரச்சினைகளை சுமந்துகொண்டிருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு என்றாவது விடிவு காலம் பிறக்காதா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த உமா ராஜா கூறும்போது, ‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் பெண்கள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், வாகன நிறுத்துமிடங்கள் சிறுநீர் கழிக்கும் இடங்களாக மாறி இருக்கிறது. இதனால் சில பகுதிகளை கடக்கும் போதுபொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

மார்க்கெட் முழுவதும் கால்நடைகள் சுற்றி திரிவதால், சில நேரங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிருக்கும் காய்கறிகள், பழங்கள் மீது அவை எச்சில் வைத்து விடுகின்றன. இதனால், நோய் தொற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறது,’ என்றார்.

அம்பத்தூரை சேர்ந்த விக்னேஷ் பால்பாண்டியன் கூறும்போது, ‘மார்க்கெட்டில் பொதுமக்கள் இளைப்பாற போதிய வசதி இல்லாததால், குறிப்பாகமுதியோர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதேபோல், போதுமான குடிநீர் வசதியும் இல்லை. மழைக்காலங்களில் கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் சகதியும், தண்ணீரும் தேங்கி நிற்கிறது.

வியாபாரிகளுக்கு இது பழகி இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பலவித சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். பல ஆண்டுகளாக இதற்கு தீர்வு கிடைக்காமல் இதே நிலைதான் நீடிக்கிறது,’ என்றார்.

கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் கூறியதாவது: ஓவ்வொரு ஆண்டும் வியாபாரிகளையும், மார்க்கெட்டை நிர்வகிக்கும் நிர்வாக குழுவையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்கப்படும். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக அந்த கமிட்டி அமைக்கப்படவில்லை.

இதனால், வியாபாரிகளுடன் கலந்தாலோசிக்காமல், சிஎம்டிஏ நிர்வாகம் தன்னிச்சையான முடிவைஎடுத்து வருகிறது. தொழிலாளர்கள், காவலாளிகள், கழிப்பறை, தூய்மை பணி உள்ளிட்ட ஒப்பந்தங்கள் வியாபாரிகளின் கவனத்துக்கு கொண்டு வராததால், இந்த பணிகளில் உள்ள குறை, நிறைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறோம். மார்க்கெட்டுக்குள் வரும் வாகனங்களை சிஎம்டிஏ நிர்வாகம் தணிக்கை செய்து அதன்பிறகு அனுமதிப்பது இல்லை.

தற்போது, ஆம்னி பேருந்துநிலையம் இடமாற்றம் செய்யப்படுவதால், அந்த இடத்தை மார்க்கெட்டுக்காக சரக்கு வாகனங்களை நிறுத்த வழங்க வேண்டும். மார்க்கெட்டில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சீர் செய்வதற்கு உடனடியாக வியாபாரிகளை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறியது: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளஅனைத்து கழிப்பறைகளிலும் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. காய்கறி, பழங்கள் வளாகங்களில் உள்ள கழிப்பிடங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டன. மேலும்,கழிப்பிடங்களை ஆக்கிரமித்து இருக்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். பொதுமக்களுக்காக பல இடங்களில் சுத்திகரிப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அதிகரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. அதேபோல், மார்க்கெட் முழுவதும் மெட்ரோ குடிநீர் வசதியும் ஏற்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. துறையின் அமைச்சரும் அடிக்கடி இந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், மார்க்கெட் வளாகத்துக்குள் மார்க்கெட்டில் பாதுகாப்பு ஏற்பாடு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள்வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு தெரிவித்தார்.