2022-ஐ வரவேற்று, ”பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு புத்தாண்டுத் தீர்மானங்களை பாமக பொதுக்குழு நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து இன்று பாமக இன்று வெளியிட்ட அறிக்கையில், ”பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு இணையாக 21ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதும், அதற்கான சட்டத்திருத்த முன்வரைவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. பெண்கள் அதிகம் படிக்க வேண்டும்; ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து விடுபட வேண்டும்; பெண்களைப் போகப் பொருளாகவும், பணம் ஈட்டித் தருவதற்கான பிணையாகவும் பார்க்கும் நிலை மாற்றப்பட வேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காக பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும் என்றும் ராமதாஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அந்த வகையில் ராமதாஸுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அதே நேரத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்தச் சட்டம் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிலைக்குழுவின் ஆய்வை விரைவாக முடித்து பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி நடைமுறைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக பொதுக்குழு வேண்டுகிறது” என்று தெரிவித்துள்ளது.

பாமக பொதுக்குழு புத்தாண்டை முன்னிட்டு இயற்றப்பட்ட 17 தீர்மானங்களின் விவரம்:

1. நீட் விலக்கு சட்டத்திற்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒப்புதல் பெற்று, 2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க பாமக உறுதியேற்கிறது!

3. அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

5. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க பல்கலைக்கழச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்!

6. தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும்.

7. மழை வெள்ள பாதிப்பு – தமிழக அரசு கோரிய ரூ.4,626 கோடி நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்.

8. சென்னை – சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தைத் தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மீண்டும் திணிக்கக் கூடாது!

9. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!

10. 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் மாதையன், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்!

11. பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் சட்டத்தை விரைவாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

12. சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேரை விடுவிக்கவும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13. கேரள அரசின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

14. காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!

15. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!

16. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்!

17. 2022ஆம் ஆண்டு பாமகவை வலுப்படுத்துவதற்கான திண்ணைப் பிரச்சார ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படும்!” என்று தெரிவித்துள்ளது.