கோடை சீசனைக் கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது.

இதனால் நகர் பகுதி, சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் 5 கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தன.

படகு சவாரி செய்யவும் சுற்றுலாப் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்தனர். பிரையண்ட் பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அவற்றைப் பார்த்து ரசித்தனர். தரையிறங்கி வந்து தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்கள் மோயர் பாய்ண்ட் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.

அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கம் தரைப்பகுதியில் உள்ள நகர, கிராமப்புறங்களில் அதிகம் உள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நகரின் முக்கிய‌ப் ப‌குதிக‌ளான மூஞ்சிக்கல், சீனிவாச‌புர‌ம், ஏரிச்சாலை, அப்ச‌ர்வேட்ட‌ரி, அப்ப‌ர்லேக்வியூ உள்ளிட்ட ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து சென்றன.

சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளின் தொட‌ர் வ‌ருகையால் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதியில் கோடை சீசன் க‌ளை க‌ட்டியுள்ள‌து.