காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக எல்ஐசி அறிவித்துள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க ஒரு சிறப்பு பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. கொரோனா பேரிடர் நீடிக்கும் நிலையில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான இடர் காப்பீட்டை வழங்கும் முயற்சியாக, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக எல்ஐசி அறிவித்துள்ளது. நேற்று முதல் துவக்கப்பட்டுள்ள இந்த தனிநபர் பாலிசி புதுப்பிப்பு முகாம் 2 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 22 வரை நடைபெறும் என்றும் எல்ஐசி குறிப்பிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டே காலாவதியான தனிநபர் பாலிசிகளுக்காக 2 மாத காலத்திற்கு இந்த சிறப்பு முகாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக LIC கூறி இருக்கிறது. தவிர்க்க முடியாத சூழலால் சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்த முடியாமல் போன பாலிசிதாரர்களின் நலனுக்காக இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு பிரச்சாரத் திட்டத்தின் கீழ் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முதல் செலுத்தப்படாத பிரீமியம் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட தகுதியுள்ள சில திட்டங்களின் பாலிசிகளை புதுப்பித்து கொள்ளலாம். இந்த சிறப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாலிசிதாரர்கள் தங்கள் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் தாமதமாக செலுத்தப்படும் கட்டணத்திற்கு (late fees) எல்ஐசி சலுகையை அறிவித்துள்ளது.