சென்னை: புதிய சொத்துவரி தொடர்பான நோட்டீசை திங்கள்கிழமை முதல் வீடு வீடாக சென்று அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தன. சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது.

இதன்படி சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் இந்த அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆணையருக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

39 பேர் தங்களின் ஆட்சேபனைகளைத் தெரிவித்து மனுக்கள் அளித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆட்சேபனைகளுக்கு பதில் அளித்தும், சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், புதிய சொத்துவரி வசூலிக்கும் பணியை விரைவில் சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. சென்னையில் மொத்தம் 18 லட்சம் சொத்துகள் உள்ளது. முதல் கட்டமாக உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி தொடர்பான விவரங்களை அனைவருக்கும் அளிக்க வேண்டும். இதனால் புதிய சொத்துவரி குறித்து நோட்டீஸ் அச்சடிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வரும் வாரத்தில் இருந்து இந்த நோட்டீஸ் வீடு வீடாக சென்று அளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. சென்னை மாநகராட்சி வருவாய் துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று இந்த நோட்டீசை வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த நோட்டீஸில் புதிதாக கட்ட வேண்டிய சொத்துவரி எவ்வளவு என்ற விவரம் இருக்கும். தெருவின் மதிப்பு, கட்டட பரப்பளவு, காலிமனை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சொத்துவரி குறித்து தெளிவாக தெரிவிக்கப்படும்.

சொத்து உரிமையாளர்கள் அதை பார்த்து தங்களின் புதிய சொத்துவரி சரியாக உள்ளதா என்பதை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம். கணக்கீட்டின்படி சொத்துவரி உயர்வு சரியாக இருந்தால் அந்த தொகையை செலுத்த வேண்டும். தவறாக உள்ளது என்று நினைத்தால் 15 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம்.

சென்னையில் தெருக் கட்டணங்களின் அடிப்படையில் சொத்துவரி கணக்கீடு செய்யப்படுவதால், ஒவ்வொரு தெருவுக்கும் அடிப்படை கட்டணம் மாறும். எனவே ஒவ்வொரு தெருவுக்கும் சொத்துவரி மாறும்.

எப்படி உயருகிறது சொத்துவரி?

பழைய சென்னை மாநகராட்சி

சதுர அடி – உயர்வு சதவீதம்

600-க்குள் – 50 சதவீதம்

601 – 1,200 – 75 சதவீதம்

1,201 – 1,800 – 100 சதவீதம்

1,800-க்கு மேல் – 150 சதவீதம்

2011-ல் இணைந்த பகுதிகள்

சதுர அடி – உயர்வு சதவீதம்

600 க்குள் – 25 சதவீதம்

601 – 1,200 – 50 சதவீதம்

1,201 – 1,800 – 75 சதவீதம்

1,800-க்கு மேல் – 75 சதவீதம்

பழைய கட்டிடங்களுக்கு தள்ளுபடி

சென்னை மாநகராட்சியில் பழைய கட்டடங்களுக்கு தேய்மான அடிப்படையில் மொத்த சொத்துவரியில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

1997 மார்ச் வரை – 10 சதவீதம்

1997 ஏப்ரல் முதல் 2007 மார்ச் வரை – 6 சதவீதம்

2007 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை – 3 சதவீதம்

2017 ஏப்ரல் முதல் – இல்லை