உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘ம.பி. உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பொது பிரிவினருக்கு மாற்றி அறிவிக்க வேண்டும். அதன்பின் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று ம.பி. மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டது.
அந்த உத்தரவை திரும்ப பெற கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று மனு தாக்கல் செய்தது. அதில், ‘‘எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினரின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இதில் ஓபிசி பிரிவினரின் பங்கேற்பு போதிய அளவுக்கு இல்லை. இது அதிகாரப்பரவல், அடிமட்ட அள வில் நிர்வாக செயல்திறனை கொண்டு செல்லும் நோக்கத்தை குலைப்பதாக இருக்கிறது.
இதுதொடர்பாக முழு அறிக்கை தயாரிக்க ம.பி. உள்ளாட்சித் தேர்தலை 4 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்’’ என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த மனு ஜனவரி 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.