இந்தி படங்களில் நடித்து என் நேரத்தை நான் வீண்டிக்க விரும்பவில்லை என நடிகர் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சர்க்காரு வரி பாட்டா’ திரைப்படம் வரும் மே 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் த்ரிவிக்ரமுடன் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. கடந்த 1999-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமான மகேஷ்பாபு தனது திரை வாழ்வில் 23 ஆண்டுகளை கடந்துள்ளார். ஆனால், இந்தி திரைப்பத்துறையிலிருந்து அவருக்கு பல வாய்ப்புகள் வந்தும், அதில் நடிக்க மறுத்து வருகிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக அவர் தயாரிக்கும் ‘மேஜர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அளித்த பேட்டியில், இந்தி படங்களில் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”நான் திமிருடன் பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். இந்தியில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவர்களால் என்னை நடிக்க வைக்க முடியாது என நினைக்கிறேன்.

நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு திரையுலகில் எனக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்தும் காதலும், வேறு துறைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்க விட்டதில்லை. நான் எப்போதும் தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். இந்தியா முழுவதும் உள்ளவர்கள், அந்த படங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்போது அது நடக்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது பலம் தெலுங்கு படங்கள் தான், என்னால் தெலுங்கு மொழிப்பட திரைப்பட உணர்வை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்ற இந்த வலுவான கருத்து எனக்கு எப்போதும் உண்டு” என தெரிவித்துள்ளார்.