கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் ஆவின் மூலம் தினமும் 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. திருநெல்வேலி, தேனி போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் பால் வரவழைக்கப்பட்டு, பதப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், நாகர்கோவில் பால்பண்ணையில் உள்ள ஆவின் தயாரிப்பு நிலையத்தில் பாலை பதப்படுத்தி குளிரூட்டும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 27-ம் தேதியில் இருந்தே இம் மாவட்டத்தில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பால் முகவர்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட பால் கெட்டுப்போய் இருப்பது தெரியவந்தது. மேலும், ஆவின் டேங்கரில் இருந்த 5 ஆயிரம் லிட்டர் பாலும் கெட்டுப்போய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பால் பதப்படுத்தும் குளிரூட்டும் இயந்திரத்தில் பைப்பில் அடைப்பு ஏற்பட்டு பழுதடைந்ததால், பால் பதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானது. பழுது ஏற்பட்ட இயந்திர பாகங்களை சரிசெய்ய தற்போது மதுரைக்கு அனுப்பியுள்ளனர். அதேநேரம் ஆவின் பால் கிடைக்காமல் நேற்றும் 4-வது நாளாக மக்கள் அவதியடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சேமிக்கப்பட்ட 8 ஆயிரம் லிட்டர் பசும்பாலை திருநெல்வேலி ஆவினுக்கு அனுப்பி, அங்கு பதப்படுத்தி கொண்டு வந்து ஆவினில் விநியோகம் செய்கின்றனர். இது பாதியளவு தேவையைக் கூட பூர்த்தி செய்யாத நிலையில், தினமும் 10,000 லிட்டர் பாலுக்கு மேல் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆவின் பால் வாடிக்கையாளர்கள் பிற தனியார் பாக்கெட் பாலை வாங்குகின்றனர். இதனால் ஆவின் நிறுவனத்துக்கு தினமும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் முகவர்கள் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்டம் ஆவின் தயாரிப்பு நிலையத்தில் தினமும் பால் தரபரிசோதனை மேற்கொள்வது வழக்கம். இதன் மூலம் பாலின் தன்மை, கெடும் தன்மை போன்றவை தெரிந்துவிடும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாகவே இந்த தரபரிசோதனை தினமும் நடைபெறவில்லை. இதனால் நெய், தயிர் போன்றவை உறைந்து இயந்திர பைப்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தரபரிசோதனை முறையாக செய்யாததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்” என்றனர்.