மேகதாது அணை விவகாரம் குறித்து உடனடியாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் திருமாவளவன் எம்.பி கோரினார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி தாக்கல் செய்த அறிக்கையில், “தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என காவிரி தீர்ப்பாயமும் உச்சநீதிமன்றமும் ஆணை பிறப்பித்திருக்கிற நிலையில் கர்நாடக அரசு அந்த ஆணையை மீறும் வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தனது நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியுள்ளது, மத்திய அரசும் இதனை ஊக்கப்படுத்துகிறது. இது வெளிப்படையாக தமிழக மக்களுக்கு இழைக்கபடுகிற துரோகம். நாடாளுமன்றத்தில் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இதனை உடனடியாக விவாதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.