ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் ராப்பத்து 8-ம் திருநாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா டிச.22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு ஜன.2-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ராப்பத்து திருநாள் நடைபெற்று வருகிறது. இதில் 7-ம் திருநாளான நேற்று முன்தினம் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

தொடர்ந்து 8-ம் திருநாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவரான நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, மணல் வெளியில் வையாளி கண்டருளினார். தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் இரவு 11 மணிக்கு வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

புராண வரலாறு: சோழப் பேரரசில் தளபதியாக இருந்து பின்னர் சிற்றரசனாக இருந்த திருமங்கை மன்னன், பெருமாள் மீது கொண்ட அதீத பக்தியால் ஸ்ரீரங்கம் கோயிலில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார். அப்போது போதுமான நிதியில்லாமல் கவலையடைந்த திருமங்கை மன்னன், வழிப்பறியில் ஈடுபட்டு, அந்த பொருட்களைக் கொண்டு திருப்பணிகளை மேற்கொண்டார்.

தனது பக்தனாக இருந்த போதிலும் தவறான வழியில் பொருட்களை சேர்த்து திருப்பணிகள் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த பெருமாள் மாறுவேடத்தில் வரும்போது, இதை அறியாத திருமங்கை மன்னன் வழக்கம்போல வழிப்பறி செய்ய பெருமாளையும் வழிமறித்துள்ளார்.

பெருமாள் மந்திரம்: அப்போது, மன்னனை திருத்த அவரது காதில் பெருமாள் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை கூறினார். இதன் மகிமையால் திருமங்கை மன்னன் திருந்தி, பெருமாளின் ஆசியோடு திருமங்கையாழ்வாராக மாறியதாக வரலாறு.

இந்த புராண வரலாற்று நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் கோயில் வளாகத்தில் உள்ள மணல் வெளியில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.