பண மோசடி புகார் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகர் விளக்கமளித்துள்ளனர்.

யூ-டியூப் தளத்தில் பிரபலங்களாக இருப்பவர்கள் கோபி – சுதாகர். இவர்கள் நடத்தும் ‘பரிதாபங்கள்’ சேனலை 30 லட்சத்துக்கும் அதிகாமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவ்வப்போது இவர்கள் வெளியிடும் நகைச்சுவை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.
கடந்த 2018ஆம் ஆண்டு பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருப்பதாகவும், அதன் சார்பில் ஒரு படம் எடுக்க உள்ளதாகவும் அதற்காக ‘க்ரவுட் ஃபண்டிங்’ முறையில் பணம் திரட்ட உள்ளதாகவும் அறிவித்து வீடியோ வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் அவர்களுக்கு பணம் அனுப்பி வைத்தனர்.

இந்த சூழலில் சமீபத்தில் பரிதாபங்கள் சேனலில் சூப்பர் பேக்கர்ஸ் என்ற செயலியை விளம்பரப்படுத்தி அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக கோபி – சுதாகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இந்த பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கோபி – சுதாகர் இருவரும் விளக்கமளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

இரண்டு விஷயங்களை தெளிவுப்படுத்தவே இந்த வீடியோ. முதலில் சூப்பர் பேக்கர்ஸ். அந்த செயலி நிர்வாகத்தினர் எங்களிடம் விளம்பரம் கொடுக்க வந்தனர். மற்ற சேனல்களில் எப்படி விளம்பரம் செய்வார்களோ அப்படித்தான் நாங்களும் விளம்பரம் செய்திருந்தோம். அவ்வளவு தான் எங்களுக்கும் அவர்களுக்குமான தொடர்பு. மற்றபடி அவர்களது தொழிலுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

இரண்டாவது படம் தொடர்பான குற்றச்சாட்டு. படம் தொடங்கும்போதே சில கேள்விகள் எல்லாம் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது குற்றச்சாட்டாக மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. படம் தொடங்கியது முதலே வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் முழு மூச்சாக இந்த படத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

பணம் வாங்கிவிட்டோம் என்பதற்காக ஏனோதானோவென்று ஒரு படத்தை கொடுத்து விடக் கூடாது என்று நினைக்கிறோம். ஏன் இவ்வளவு இடைவெளி என்பது படத்தின் டீஸர் வரும்போது உங்களுக்கு புரியும். கரோனாவால் சினிமாவின் ஒரு பெரும்பகுதி இயங்கவே இல்லை. இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். விரைவில் டீசர் வரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.