காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரையை ஊடகங்கள் புறக்கணிப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று ராஜஸ்தானில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கலந்து கொண்டார். அப்போது அவர், “இன்று மக்கள் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வரவேற்பு தருகின்றனர். சமூக வலைதளங்களிலும் ஆதரவு இருக்கிறது. ஆனால் பிரதான ஊடகங்கள் இந்த செய்திகளைப் புறக்கணிக்கின்றன. ஊடகங்களில் இருக்கும் நண்பர்களே இந்தச் செய்திகள் புறக்கணிக்கப்படுவதற்கு உங்களை குறை கூட மாட்டேன். நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் தகவல்களைத் தருகிறீர்கள். ஆனால், உங்கள் அனைவரிடம் இந்திய ஒற்றுமை யாத்திரை இருட்டடிப்புச் செய்யச் சொன்னவர்கள் யார் என்பதைச் சொல்லுங்கள்.

இதுபோன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்ப உங்களுக்கு யார் தடை போடுகிறார்கள்? ஊடகம் என்பது தேசத்தின் 4-வது தூண் என்பதை மறந்துவிடாதீர்கள். ராகுல் காந்தி தன் நேர்மறை சிந்தனைகளைப் பகிர்ந்து வருகிறார். இதனை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். இந்திய தேசம் உங்களை மன்னிக்காது. ராகுல் காந்தி உண்மையின் பாதையை பின்பற்றுகிறார். அந்தப் பாதை பற்றி செய்தி வெளியிடுவது நம் கடமையல்லவா?” என்றார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை இதுவரை 7 மாநிலங்களில் 2500 கிலோமீட்டர் தூரம் கடந்துள்ளது. இந்த யாத்திரையில் மேதா பட்கர் போன்ற சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இன்னும் யாத்திரையில் 1200 கி.மீ தூரம் கடக்கவேண்டி இருக்கிறது. இந்த யாத்திரை காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. இந்த யாத்திரை முடிந்தவுடன் கையோடு ‘கைகோத்து யாத்திரை’ (Hath se Hath Jodo) என்ற பெயரில் இன்னொரு யாத்திரை நடைபெறவுள்ளது. ஜனவரி 28-ல் தொடங்கும் இந்த யாத்திரையில் இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.