தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்த விபத்துகளில் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் 179 பேர் உள்நோயாளிகளாகவும், 345 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்றுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தீபாவளி பண்டிகையன்று நிகழ்ந்த பட்டாசு விபத்துகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: ” தீபாவளியன்று பட்டாசு வெடித்த விபத்துகளில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் 11 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 பேரில், திருவண்ணாமலை, பண்ருட்டி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் கைகளில் காயம் ஏற்பட்டு, விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கூட இவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்குமே ஓரிரு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டு வீடு திரும்புவர். அதேபோல் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு குழந்தை தெலங்கானாவில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இரு குழந்தைகளுக்குமே 6 முதல் 7 சதவீத காயங்கள் உள்ளன. இருவரும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவர்.

கீழ்பாக்கம் மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் புற நோயாளிகளாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பெற்று வரும் அனைவரும் நலமாக உள்ளனர். இதில் ஒருவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அநேகமாக அவருக்கு பார்வை இழக்கும் சூழல்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற ஒரு குழந்தைக்கு மட்டும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 15-16 சதவீத தீக்காயங்கள் இருந்தாலும், குழந்தை பாதுகாப்பாக இருக்கிறார். எனவே அனைவருமே ஒரு பத்து நாட்களுக்குள் வீடு திரும்ப வாய்ப்புள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் தீபாவளியன்று நிகழ்ந்த பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்பட்ட 345 பேர் புற நோயாளிகளாகவும், 179 பேர் உள் நோயாளிகளாகவும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்” என்று அவர் கூறினார்.