“முல்லைப் பெரியாறில் இருந்து தமிழக அரசு தண்ணீர் திறந்ததால், இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதிமுக போராட்டம் நடத்தினால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுகவைக் கண்டித்து போராட்டம் நடத்தும்” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நாகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிற ஆர்.பி.உதயகுமார் மற்றும் மற்றொரு அணியின் தலைவராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும், ஏதோ தமிழக அரசாங்கம், கேரள அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை திறந்துவிட்டு தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை உண்டாக்கிவிட்டதாக கூறுகின்றனர்.
மேலும், இதனை எதிர்த்து தாங்கள் போராட்டம் நடத்தப்போவதாக ஆர்.பி. உதயகுமார் அறிவித்துள்ளார். இந்த இரண்டு பேருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓர் அரசியல் ஆதாயத்திற்காக, எதை வேண்டுமானாலும் பேசலாம், எந்த வரம்பையும் மீறி பேசலாம் என்பதற்கு, இதைவிட சிறந்த உதாரணம் ஒன்றும் இருக்காது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏதோ கேரள அரசிடம் பணிந்துவிட்டது, உரிமைகளை விட்டுகொடுத்துவிட்டது போன்று அரசியல் செய்வது மிக மிக அருவெறுக்கத்தக்க அரசியல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே, அதிமுக இதனை கண்டித்து போராட்டம் நடத்தினால், அதிமுகவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென் மாவட்டங்களில் போராட்டம் நடத்தும்” என்று அவர் கூறினார்.