தான் உலக அழகிப் பட்டம் வென்ற போது தனது கணவர் நிக் ஜோனாஸ் ஏழு வயது சிறுவனாக அதனை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருந்த சம்பவத்தை தனது மாமியார் தன்னிடம் கூறியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா 2000ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றவர். உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவரான இவர் பிரபல அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பிரியங்கா சோப்ரா, பாலிவுட் நடிகையும் தனது தங்கையுமான பரினீதி சோப்ராவின் திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ளார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது மாமியார் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “என் மாமியார் என்னிடம் ஒரு சம்பவத்தை கூறினார். கடந்த 2000ஆம் ஆண்டு லண்டனில் நான் உலக அழகிப் பட்டம் வென்றேன். அப்போது எனக்கு 18 வயது ஆகியிருந்தது. அந்த நிகழ்வு பற்றி என்னிடம் பேசிய என் மாமியார், “நீ வென்றபோது உன்னை நான் தொலைகாட்சியில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உலக அழகி போட்டியின் நேரடி ஒளிபரப்பை அப்போது என்னுடன் அமர்ந்து நிக் ஜோனாசும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, அவனுக்கு 7 வயது இருக்கும்” என்று என்னிடம் கூறினார். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை.” இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.