சென்னை ராஜன் கண் மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட இலவச சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் சரிதா ஜெயின் அறக்கட்டளையின் பெயரில் 20 படுக்கைகள் கொண்ட இலவச கண் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவ இயக்குநர் மோகன் ராஜன் தலைமையில் நேற்று நடந்த விழாவில், இந்த சிகிச்சை பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மருத்துவமனை செயல் இயக்குநர் சுஜாதா மோகன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் பங்கஜ் தவே உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, ‘‘மருத்துவர் மோகன்ராஜன் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த மருத்துவ சேவையை செய்து வருகிறார். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை அதிகரித்தபோது, மருத்துவக் குழு அமைத்து கருத்துகளை முதல்வர் கேட்டார். குழுவில் இருந்த மோகன் ராஜனின் கருத்துகள் பயனுள்ளதாக இருந்தது. அவர் கூறியபடியே, தமிழகம்முழுவதும் சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டன. இலவச சிகிச்சைக்காக மையம் அமைப்பது சென்னையில் இது முதல்முறை. பேரிடர் காலத்தில் அனைத்து விதமான உதவிகளையும் செய்த அமைப்பு ரோட்டரி சங்கம்’’ என்றார்.

மோகன் ராஜன் கூறும்போது, “ராஜன் கண் மருத்துவமனை 1995-ல் தொடங்கப்பட்டது. 1996-ல்தொடங்கப்பட்ட சென்னை விஷன்சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ஏழை களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த டிரஸ்ட்டுக்கு உதவிய சரிதா ஜெயின் அறக்கட்டளையின் பெயர்இலவச சிகிச்சை பிரிவுக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை மக்கள் தங்கி இலவச சிகிச்சை பெற முடியும்” என்றார்.