மகாராஷ்டிராவில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி அளவிலான வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் நந்தர்பர். நாசிக் மற்றும் துலே பகுதிகளில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் இரு குழுமங்களுக்கு சொந்தமான, 25க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

செலவினங்களை கூடுதலாக கணக்கு காட்டி, வருவாயை குறைவாக கணக்கு காட்டியுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் பெயரில் துணை ஒப்பந்தங்கள் போலியாக கொடுக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள் மூலம் ரூ.150 கோடி அளவிலான வருமானத்தை இந்த குழுமங்கள் கணக்குகாட்ட வில்லை.

நிலங்கள் பரிவர்த்தனை மற்றும் ரொக்க கடன்கள் ரூ.52 கோடி மதிப்பில் நடந்துள்ளன. இவை கணக்கில் காட்டப்படவில்லை. இதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் மற்றும் நகைகளும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.