கோவையில் உள்ள பழமையான தேவாலயங்களில் ரேஸ்கோர்ஸில் உள்ள சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் தேவாலயம் குறிப்பிடத்தக்கது. கற்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இன்றளவும் அதன் தன்மை மாறாமல் அப்படியே உள்ளது. 1866-ம் ஆண்டு இந்ததேவாலய கட்டுமானப் பணிகள் தொடங்கின. கட்டுமான செலவாக ரூ.13,767 நிர்ணயிக்கப் பட்டது. இதில், மானியமாக அன்றைய அரசுரூ.5 ஆயிரமாக அளித்துள்ளது. நன் கொடையாளர்கள் உதவியுடன் எஞ்சியுள்ள தொகை பெறப்பட்டு தேவலாயம் கட்டப்பட்டது. 1872-ம்ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் பயன் பாட்டுக்கு வந்த இந்த தேவாலயம் நடப்பாண்டு 150-ம் ஆண்டு விழா காண்கிறது. அதை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

முதலில் ஆங்கிலேயர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் இந்த தேவாலயத்தில் வழிபாடு நடத்தி வந்தனர். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு இந்தியர்களும் இந்த தேவாலயத்தில் வழிபடத் தொடங்கினர். 1980-ம் ஆண்டு வரையிலும் ஆங்கில பாதிரியார்களே இந்த தேவாலயத்தில் இருந்துள்ளனர். அதன்பிறகு இந்திய பாதிரியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலமொழி பேசும் இந்திய மக்கள் வழிபட்டு வருகின்றனர். கல்விபணிக்காக கோவையில் தங்கியிருந்த ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களும் இங்கு வழிபட்டுள்ளனர்.

இந்த ஆலயத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினரும், கோவை சிஎஸ்ஐ திருமண்டல உறுப்பினருமான செ.ஏசுபால் கூறும்போது, “சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் தேவாலயம் உருவானபோது இந்தப்பகுதியில் வேறு எந்த பெரிய கட்டிடமும் இல்லை. இந்த ஆலயத்தின் கட்டிடக்கலை தனித்தன்மை வாய்ந்தது. இந்த அமைப்பில் கோவையில் வேறு எங்கும் கட்டிடங்கள் இல்லை. இந்த தேவாலயத்தின் பெயரில் அவிநாசி மேம்பாலத்தின் கீழ் ஆல்சோல்ஸ் தெரு என்ற பெயரில் இன்றும் ஒருதெரு உள்ளது.

இந்த ஆலயமானது கடந்த இரண்டாண்டு காலமாக இறைப்பணி மட்டுமல்லாமல் சமூகப்பணி, மக்களின் மறுவாழ்வுபணியிலும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கரோனா தொற்று காலத்தில் இந்த ஆலயத்தின் தலைவர் ஆயர் அருட்திரு சார்லஸ் சாம்ராஜின் முயற்சியால் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள், பணஉதவி ஆகியவை வழங்கப்பட்டது. வெள்ளியங்காடு, பில்லூர் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் இருப்பிடத்துக்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. வீடுகளில் சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டது” என்றார்.