புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரது கனவை நனவாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும் என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து மாணவ- மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

நாட்டின் சுதந்திரத்துக்காக எண்ணிலடங்காதோர் பல்வேறு வகைகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்போது வரையிலும்கூட அடையாளம் காணப்படவில்லை என்பது துரதிஷ்டவசமானது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஓர் ஆய்வை நடத்தி, நம் நாட்டுக்கு அவர்களது பங்களிப்பின் விவரங்களை அழியாத வகையில் பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தியாகிகளையும், மாவீரர்களையும் மறக்கும் தேசம் நன்றி கெட்டதுடன் மட்டுமின்றி, இருண்ட எதிர்காலத்தை கொண்டுள்ளது என்றும் கூறலாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதன் 80-க்கும் அதிகமான மையங்கள் மற்றும் 160-க்கும் அதிகமான இணைப்புக் கல்லூரிகள் மூலம் தமிழ்நாட்டின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்கிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ மாணவர்கள் 2.80 லட்சம் பேர் பல்வேறு கற்றல் திட்டங்களைத் தொடர்கின்றனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்புத் துறைகளைக் கொண்டு கற்பித்தல் பணியுடன், ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பேராசிரியர்கள் பலரும் பல்வேறு விருதுகளை பெற்றவர்கள்.

புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரது கனவை நனைவாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும். இந்தியாவை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுச் சமூகமாக மாற்றுவதற்கு உதவும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் உயர் தர கல்வியை வழங்க உறுதியேற்க வேண்டும்.

தற்போதைய கல்வி அமைப்பில் உள்ள தடைகளை அகற்ற தேசிய கல்விக் கொள்கை உதவி புரியும். இதில், கற்றல் முடிவுகளை எடுத்தல், துறைகளைப் பிரித்தல், வரையறுக்கப்பட்ட அணுகுமுறை, குறிப்பாக சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர் மற்றும் நிறுவன சுயாட்சிக்கு கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கல்வியை உள்ளடக்கிய மற்றும் நவீனமாகவும் மாற்றுவதற்கு பிரதமரால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை உயர் கல்விக்குத் தயார்படுத்துவதற்கான ப்ரேர்னா திட்டம், ஸ்டார்ட் அப்களை அமைப்பதற்கான சம்ரித்தித் திட்டம், மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு வழங்கப்படும் எஸ்எஸ்பிசிஏ திட்டம், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன.

இவை தவிர ஸ்வச் பாரத், சம்ருத்த பாரத், ஆத்ம நிர்பார் பாரத், ஜல் ஜீவன் மிஷன், ஜன்தன் யோஜனா, ஆன்லைன் கல்வி, நேரடி பயன் மாற்றம், மேம்படுத்தப்பட்ட எம்எஸ்பி, உள்நாட்டு பாதுகாப்பு தொழில் வளாகம், உலகளாவிய ஒத்துழைப்பு, பல தரப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான மற்ற முயற்சிகளாகும். அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றமான இந்தியாவை உலகுக்கு முன்மாதிரியாக கட்டமைக்கும் திட்டங்களாகும் என்றார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி, புதுடெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் (பொறுப்பு) ப.கனகசபாபதி ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் டி.கார்த்திகேயன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம் வரவேற்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் க.கோபிநாத் நன்றி கூறினார்.