நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் இந்திய கிரிக்கெட் அணியின் புதுமுக இளம் வீரர்களுக்கு நல்வாய்ப்பாக அமையும் என்று இந்திய அணியை இந்தத் தொடரில் வழிநடத்தும் கேப்டன் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நியூஸிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டன் நகரில் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்கள் அடங்கும். இதில் டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இளம் வீரர்கள் அடங்கிய அணியை பாண்டியா வழிநடத்துகிறார்.

இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி இன்று மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் பாண்டியா தெரிவித்தது, “இந்திய வீரர்கள் அனைவரும் இந்தத் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளனர். கிரிக்கெட் விளையாட நியூஸிலாந்து சரியான இடம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று விளையாட முடியவில்லை.

எங்கள் அணியில் உள்ள வீரர்கள் இளையவர்களாக இருக்கலாம். ஆனால், அனுபவத்தில் அல்ல. இவர்கள் அனைவரும் நிறைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். சிலர் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். நிச்சயம் இந்தத் தொடர் புதியவர்களுக்கான நல்வாய்ப்பாக அமையும் என கருதுகிறேன். அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவர் என நம்புகிறேன்.

உலகக் கோப்பை முடிந்துவிட்டது. நான் அதை கடந்து வந்துவிட்டேன். மீண்டும் சென்று நடந்த எதையும் நம்மால் மாற்ற முடியாது. இந்தத் தொடரில் விளையாட நாங்கள் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

அவர் சொல்லியுள்ளதை போல அந்த வார்த்தைகள் பலிக்கட்டும். அது எதிர்வரும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு பெரிதும் கைகொடுக்கும் என நம்புவோம்.