மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவ வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக விவசாயிகள் நேற்று நேரில் வலியுறுத்தினர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குழுவினர், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கர்நாடகம் காவிரியில் தொடர்ந்து பல அணைகளை கட்டி தமிழகத்துக்கு வரக்கூடிய தண்ணீரை முழுமையாக தடுத்துவிட்டது. தற்போது உபரி நீர் மட்டுமே தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிறது. தற்போது, அதையும் நிறுத்த திட்டமிட்டு தமிழக எல்லை அருகே காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கவும் முயற்சி செய்கிறது. மத்திய அரசு மறைமுகமாக கர்நாடகாவுக்கு துணை போகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அனுமதி இல்லாமல் கர்நாடகாவுக்கு மேகேதாட்டுவில் அணை கட்ட வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு தன் விருப்பத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில், புதிய அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் அனுப்பி வைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் இதுகுறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கடந்த வாரம் கர்நாடக முதல்வரிடம் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இந்நிலையில், இன்று (ஆக.31) நடக்க உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை வரைவு திட்ட அறிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம், பெரும்பான்மை அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும். திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவை, உச்ச நீதிமன்றம்தான் இறுதி செய்ய முடியும். இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரள மாநிலங்கள் அங்கம் வகிப்பதால், கேரள அரசு தமிழக விவசாயிகளின் நலன் கருதி மேகேதாட்டு அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க ஆதரவளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘‘கேரள நீர்ப்பாசனத் துறை உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி, தமிழகத்துக்கு உதவ தயாராக இருக்கிறோம்” என உத்தரவாதம் அளித்ததாக பி.ஆர்.பாண்டியன் கூறினார்.