சென்னை மாநகராட்சி வடக்கு வட்டாரத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 100 மதிப்பெண்களுக்கு ஓபன் புக் தேர்வு வைத்து, தானும் அந்த தேர்வை எழுதியுள்ளார் வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்கள் 3 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, மத்திய, தெற்கு வட்டாரம் என்று பிரிக்கப்பட்டு துணை ஆணையர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு வட்டாரத்தில் திருவெற்றியூர்,மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 மண்டலங்கள் உள்ளன. இந்த வடக்கு வட்டாரத்தின் துணை ஆணையராக சிவகுரு பிரபாகரன் என்ற ஐஏஎஸ் அதிகாரி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சாலைப்பணிகளை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக 100 மதிப்பெண்களுக்கு ஓபன் புக் தேர்வு வடக்கு வட்டாரத்தில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கு நேற்று நடத்தப்பட்டுள்ளது. துணை ஆணையரும் இந்தத் தேர்வை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வடக்கு வட்டாரத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் கூறுகையில், “சாலை பணிகளை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய விதிகள் தொடர்பாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு சாலை விதிகளை மீண்டும் ஒரு முறை படித்துத் தெரிந்து கொள்ள எங்களுக்கு உதவியாக இருந்தது. எங்களுடன் சேர்ந்து சம்பந்தபட்ட துணை ஆணையரும் இந்த தேர்வை எழுதினார்” என்று தெரிவித்தார்.