பறவைகள், வி\லங்குகளிடம் இருந்து விவசாயப் பயிர்களைப் பாதுகாக்க புதுச்சேரி அரசு பள்ளி 6-ம் வகுப்பு மாணவர் புதிய கருவியை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஹரிஹரன். இவர் விவசாயிகளின் துயரை துடைக்கும் வகையில், வழிகாட்டி ஆசிரியர் குருநாதன் ஆலோசனையோடு விளை நிலங்களில் காற்றின் திசைகேற்ப சுழன்று ஒலி எழுப்பி விலங்குகளையும், பறவைகளையும் விரட்டக்கூடிய கருவியை உருவாக்கியிருக்கிறார்.

இக்கருவியை புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த நவம்பரில் நடைபெற்ற மண்டல அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்தார். இந்த கருவி நடுவர் உட்பட அனைவரையும் கவர்ந்து நடுநிலை பள்ளி பிரிவில் முதல் பரிசு வென்றது.

இதையடுத்து நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சியில் 2-ம் பரிசு கிடைத்தது. தொடர்ந்து மாணவன் ஹரிஹரனுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கி கவுரவித்தார். இதன்மூலம் கேரளாவில் அடுத்த மாதம் ஜனவரியில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட் சிக்கு மாணவர் ஹரிஹரன் தேர்வாகியுள்ளார்.

சின்ன காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த எனது ஊரில் முக்கிய தொழில் விவசாயம்தான். இங்குள்ள விவசாயிகள் விளை நிலத்தில் நெல், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களையும், உளுந்து, மணிலா போன்ற பயறு வகைகளையும் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த பயிர்களை காட்டு பன்றிகள், முயல், எலி, பறவைகளும் சேதப்படுத்துகின்றன. இவைகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் ஒரு குச்சியால் தட்டில் தட்டி ஒலி எழுப்பி கொண்டு இருப்பார்கள். இதை நானும் செய்தது உண்டு. இச்செயலை வெகு நேரம் செய்வது கடினமானது. அப்போதுதான் அறிவியல் ஆசிரியர் கூறிய `ஆற்றல் மாற்றம்’ குறித்த கருத்துக்கள் நினைவுக்கு வந்தது.

ஏன்? விவசாய நிலங்களில்இயல்பாக வீசும் காற்று எனும் ஆற்றலை ஒலி ஆற்றலாக மாற்றக் கூடாது என்று யோசித்தேன். அப்போதுதான் உழவர்களுக்கு உதவும் இந்த விவசாய கருவியை உருவாக்கினேன். இந்த கருவியின் ஒரு முனையில் காற்று வீசும் பொழுது சுழலக்கூடிய விசையாழி ஒன்றை பொருத்தியுள்ளேன்.

காற்றின் வேகத்திற்கேற்ப… மற்றொரு முனையில் தட்டில் பட்டு ஒலி எழுப்பக்கூடிய இரண்டு இரும்பு துண்டுகளை இணைத்துள்ளேன். மேலும், காற்றின் திசை, வேகத்துக்கு ஏற்றவாறு விசையாழி திரும்பி சுழலும் வகையில் கிளைடரையும் அமைத்துள்ளேன். இதன்மூலம் இக்கருவி காற்றின் வேகத்துக்கேற்ப தொடர்ந்து இயங்கி ஒலி எழுப்பி விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்கும்.

மேலும், இக்கருவியிலேயே நீர் ஒரு மின் கடத்தி என்ற தத்துவத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு ஒலி, ஒளி எழுப்பி நீர்ப்பாசனத்தின் அளவை தெரிவிக்கக் கூடிய சிக்னல் சிஸ்டம் ஒன்றையும் பொருத்தியுள்ளேன்.

இதன் மூலம் நீரையும், மின்சாரத்தையும் சேமிக்க முடியும். இக்கருவி சிறு மற்றும் குறு நில விவசாயிகளுக்கு குறைந்த செலவில் செய்து பயன்படுத்தக் கூடிய கருவியாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு ஹரிகரன் தெரிவித்தார்.

பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன், வழிகாட்டி ஆசிரியர் குருநாதன் ஆகியோர் மாணவர் ஹரிகரனை வெகுவாக பாராட்டினர்.