ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ்வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
டெஸ்ட் கேப்டன் விராட் கோலி்க்கு முதுகுவலி என்பதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப்பதிலாக கேப்டன் பொறுப்பை கேஎல் ராகுல் ஏற்றுள்ளார். விராட் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனா ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதில்முதல் முறையாக இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிக்கு ராகுல் தலைமைஏற்று அணியை வழிநடத்த உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்கப் பயணத்தின்போது ஹனுமா விஹாரி விளையாடிய அனுபவம் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நீண்டகாலத்துக்குப்பின் ஹனுமா விஹாரிக்கு ப்ளேயிங் ெலவனில் வாய்ப்புக் கிடைத்திருப்பதால், அவர் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.மற்றவகையில் இந்திய அணியில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸமேன் குயின்டன் டீ காக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டதால், அவருக்குப்பதிலாக கெயில் வெரேனே சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வகையில் தென் ஆப்பிரிக்க அணியிலும் மாற்றம் ஏதுமில்லை.
ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், இரு அணிகளும் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவம் இல்லாமல் களமிறங்குகின்றன. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் கோலி இல்லாமல் களமிறங்குவது சற்று பின்னடைவுதான். இருப்பினும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரின்போது முதல் டெஸ்டோடு கோலி தனது மனைவி பிரசவத்துக்காக தாயம் திரும்பிவிட்டார். அதன்பின் இளம் வீரர்களை வைத்து இந்திய அணி சிறப்பாக பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் செயல்பட்டு டெஸ்ட் தொடரை வென்றது.
ஆதலால், விராட் கோலி அணியில் இல்லாதது வெளியில் இருந்து பார்க்க பலவீனமாகத் தெரிந்தாலும் அதை நிரப்பும்வகையில் இளம் வீரர்கள் விளையாடுவார்கள் என நம்பலாம்.