ஒரு மாணவனுக்குப் பிடித்த பாடங்களோடு அவனுக்குச் சிறிதும் ஈடுபாடில்லாத பாடங்களையும் சேர்த்துப் படித்தால்தான் அவன் விரும்பும் பாடப் பிரிவைத் தொடர முடியும் என்பது மாணவ சமுதாயத்துக்கே வருத்தமான விஷயமாகத்தானே இருக்க முடியும்! என்னுடைய மகன் மதி-க்கும் அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டது.
பத்தாம் வகுப்பு வரை ICSE பாடத் திட்டத்தில் படித்த அவனை, மாநிலப் பாடத் திட்டத்தில் பதினொன்றாம் வகுப்பில் சேர்த்தோம். அவனுக்குக் கணினி பாடத்தில் ஆர்வம் அதிகம். ஆனால், அறிவியல், கணிதம் பாடங்களில் ஆர்வம் இல்லை. ஆனாலும், கம்ப்யூட்டர் பாடப் பிரிவைக் காரணம் காட்டி அவனை அதில் சேர்த்துவிட்டோம். மூன்று மாதங்கள் பள்ளி சென்றிருப்பான் பிடிக்காத பாடங்களாலும், மேலும் சில காரணங்களாலும் அவனால் 11-ம் வகுப்பைத் தொடர முடியவில்லை. அவன் பள்ளி செல்ல மாட்டேன் என்று சொன்னதும், உலகமே இடிந்துவிட்டதைப் போல் நானும் என் கணவரும் உணர்ந்தோம். அவன் மேல் கோபம் கொள்ளவும் எங்களுக்கு மனம் வரவில்லை. ஏனெனில், பிடிக்காத பள்ளி மற்றும் குரூப்பில் சேர்த்துவிட்டது எங்கள் தவறுதான். அதனால் மாற்று வழி என்னவென்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
என் கணவர்தான், மாற்றுக் கல்விமுறை (Alternative education), வீட்டிலிருந்தே படிக்கும் முறை (Home schooling) என்று நிறைய இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அதனால், Home schooling முறையை முயன்று பார்க்கலாம் என்று ஒரு சிறு யோசனை. அதுதான் இன்று மதி-யை NIOS-ல் பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கச் செய்திருக்கிறது.
NIOS என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு அதைப் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். குழந்தைகள் வீட்டிலிருந்தே 12-ம் வகுப்புப் படிப்பதற்கான பல வழிமுறைகளில் இதுவும் ஒன்று. NIOS – National Institute of Open Schooling, என்பது CBSE, ISC, State Syllabus போன்றதொரு அமைப்பு. இது மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இதன் பாடத்திட்டத்தை CBSE யோடு ஒப்பிட முடியும். இதில் படிக்கும் மாணவர்கள் பல பயன்களைப் பெற முடியும். உதாரணமாக, மதிக்கு அறிவியல் என்றாலே ஒத்து வராது அல்லவா? மேலும், அவனுக்குச் சட்டம் படிக்க வேண்டுமென்பது இப்போதைய குறிக்கோள்.
கம்ப்யூட்டர் மற்றும் வரலாறு ஆகியவை மிகவும் பிடித்த பாடங்கள். இவை எல்லாம் சேர்ந்த ஒரு பிரிவு எந்தவொரு பள்ளியிலும் கிடைக்கவில்லை. இப்பொழுதிருக்கும் பள்ளியில் ஏதாவது ஒரு பிரிவைத் தேர்ந்தெடுத்தால், அதில் அவனுக்குப் பிடித்த பாடங்களைவிடப் பிடிக்காத பாடங்களே அதிகம். NIOS-யைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை, அதன் பாடப்பட்டியலில் இருந்து தேர்வுசெய்து கொள்ளலாம். அவர்களின் பாடப்பட்டியலை கீழ் இருக்கும் சுட்டியில் சென்று காணலாம். https://www.nios.ac.in/…/senior-secondary-course…
மதிக்குக் கஷ்டமாக இருக்கும் பாடத்திற்கு மட்டும் டியூஷனில் சேர்த்தோம். எப்படியும் பன்னிரண்டாவது படிக்கும் நம் பிள்ளைகளை டியூஷனில் சேர்ப்போம். பள்ளிக்கும் சென்று வந்து பின்பு டியூஷனுக்கும் சென்று வர நம் பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். NIOS – ல் சேர்த்தால் டியூஷன் மட்டும் போய் வந்தால் போதுமே, பள்ளிக்குப் போகத் தேவை இல்லையே என்கிற சந்தோஷம் பெற்றோர்களாகிய எங்களுக்கு இல்லாமல் இல்லை. வாரக் கடைசி நாட்களில் சென்று நம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள NIOS-ல் வாய்ப்புள்ளது. இதற்காகச் சில குறிப்பிட்ட பள்ளிகளின் பட்டியலை, அந்தந்த நகரங்களிலேயே ஏற்பாடு செய்து கொடுக்கிறது. அந்தப் பட்டியலிலிருந்து நமக்கு வசதியான பள்ளியை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்கே சென்று செயல்முறை வகுப்புகளில் (practical classes) கலந்து கொள்ளலாம். இந்த வசதி இருக்கும் பள்ளிகள், நமக்கு இரண்டு வழிமுறைகளைக் கொடுக்கின்றன. ஒன்று எல்லாப் பிள்ளைகளைப் போலவே தினமும் பள்ளிக்குச் சென்று வரலாம். அல்லது NIOS-ன் ஆலோசனையின்படி வார இறுதியில் மட்டும் சென்று வரலாம். முதல் முறையைத் தேர்ந்தெடுத்தால், பள்ளிக்கு லட்சக்கணக்கில் கட்டணம் கட்ட வேண்டும். இரண்டாம் முறையில், கட்டணம் எதுவும் பள்ளிக்கு கட்டத் தேவையில்லை. பன்னிரண்டாவது படிக்க என் மகன் மதிக்கு ஆன செலவு 1700/- ரூபாய் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் தலா 250 ரூபாய். இந்த 1700 ரூபாய் புத்தகத்துக்கும் சேர்த்துதான்.
இம்முறையை, விளையாட்டுத் துறை மற்றும் வேறு கலைத் துறையில் ஆர்வம் கொண்ட பிள்ளைகள் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையில், 11 மற்றும் 12ம் வகுப்புகளின் அழுத்தங்கள் இல்லாமல், முழுநேரம் கவனம் செலுத்த முடியும் என்பதே காரணம்.
மதி இம்முறையைத் தேர்ந்தெடுத்ததால், பள்ளியில் படிக்கும் பாடங்கள் அல்லாமல் அவனுக்குப் பிடித்தமான பாடங்களில் சில சான்றிதழ் பயிற்சிகளையும் முடிக்க முடிந்தது. அது கல்லூரியில் சேர்வதற்கான நேர்க்காணலில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இம்முறையில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், NIOS குழுமம் வருடத்துக்கு அக்டோபர், ஏப்ரல் என இரண்டு முறை தேர்வு நடத்துகிறது. ஆகையால், பாடங்களைப் பிரித்தும் எழுதிக்கொள்ளலாம். மதி, மூன்று பாடங்களை அக்டோபரிலும், இரண்டு பாடங்களை ஏப்ரலிலும் எழுதி 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறான்.
எல்லா மாற்று முறைக்கும் நன்மை, தீமை ஆகிய இரண்டும் இருக்கும். அதைப் போலத்தான் இம்முறைக்கும் சில எதிர்மறைகளும் இருக்கின்றன. பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களுடனான நேரத்தை அதிகம் இழக்கிறார்கள். மேலும் மதி, அவனுடைய சொல்வளத்தை (vocabulary) இழந்துவருவதாக மிகவும் வருத்தமடைந்தான். NIOS-ல் படித்திருந்தால் சில தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சேர்க்கைக்கு அனுமதிப்பதில்லை. மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு ஏன் இந்தத் தயக்கம் என்பதுதான் புரியவில்லை. ஆனால், பயன்களுடன் ஒப்பிடும்பொழுது, இது பரவாயில்லை என்றே தோன்றியது. ஒன்றைப் பெற மற்றொன்றைச் சில நேரங்களில் இழந்துதானே ஆக வேண்டும்.
இன்றைக்கு மதி, இந்தியாவின் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் சட்டம் படிக்கத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறான். இப்பொழுதிருக்கும் பள்ளிக் கல்விக்கு மாற்று முறையில் செல்கிறோமோ என முதலில் மனத்தில் பயம் இருந்தது. ஆனால், எங்களின் ஊக்கமும் மதியின் உழைப்பும், இம்முறையைத் தேர்ந்தெடுத்ததில் அவனை வெற்றி பெறச் செய்திருக்கிறது. NIOS -க்கான சுட்டி: https://www.nios.ac.in/default.aspx தேவை எனில் மேற்கூறிய சுட்டியைப் பயன்படுத்தி கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
தொடர்பு மின்னஞ்சல்: vanilamk@gmail.com